Wednesday, January 25, 2012

பத்மஸ்ரீ ந.முத்துசாமி


பிரம்மாண்டங்களும் அறுவருப்புகளும் நாலாப்பக்கமும் கரையான்களாய் அறித்தொழிக்கும் வேளையில் அந்திச்சாப்பாடு முடிந்து கோவில்வாசலில் கூடும் மக்களுக்குப் புராணங்களைப் பதிவுசெய்யும் மிக உன்னத சமூகப்பணியைத் தெருக்கூத்தின் வழிசெய்யும் கலைஞர்களின் கற்பனைச் சுரங்கம்-கலையை இழந்திடாதிருக்கவும் அதன்வழியாக தெருக்கூத்து தொய்வடையாதிருக்கவும் இயக்கமாக இயங்கி தெருக்கூத்துப் பற்றிப் பெசுவதும், எழுதுவதும், பட்டறைகள் நடத்துவதும், உள்ளூரிலும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் களமேற்றுவதும் என பல வகைகளில் பணியாற்றிய ந.முத்துசாமி அவர்கள் பத்மஸ்ரீ விருதுக்குச் சாலப் பொருத்துமானவர்.

நம்பகத்தன்மையுடய நாடகம், பார்வையாளனை நாடகத்தின் நிகழ்வோடு இணைத்து பாத்திரமாக்குவதால் உலகம் ஒருத்தருக்கொருத்தர் தொடர்புடையப் பின்னலில் பிண்ணப்பட்ட உறவுக்கோளம் என்பதை உறுதிசெய்கிறது.

பகல்முழுவதும் உடலுழைப்பின் கனத்தை மனைவிமக்களோடு குதூலகம் நிரம்பிய மனதைப்பெரும் வாய்ப்பைக் கோயில் வாசலில்/திடலில் நடத்தப்படும் கூத்தினைக் கண்டுறங்கிய கண்களுள் எழும் கனவுகள் ஒவ்வொன்றையும் மறுநாள் பகல்பொழுதில் அவர்கள் வாழ்ந்து களித்திடும் விதத்திலிருந்து உணரமுடிகிறது.

ஆக்ரோஷமான திரௌதியம்மன், இவர்களின் கூத்தைக் கண்டுகளித்துதான் ஒவ்வொருநாள் இரவும் தன் நடை சாற்றி உறங்கப்போவாள், திருவிழாநாட்களில். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும், அனைத்துச் சாதியினரும் கள்ளுண்டு, களிப்புற்று இரவுப் பொழுதை கதை பார்த்து உறங்கி எழும் பாக்கியம் எத்தனை சானல்கள் வந்தாலும் ஈடுசெய்யமுடியாதது. அங்கே ஆடுவான் நம்மை ஆட்டுவிக்க பாடுவான் பாட்டுவிக்க கனவுகளில் ஒவ்வொருவரும் ரகசியமாகக் கட்டிக்கொள்ளும் வேடத்தை வெளியே சொல்ல வெட்கப்பட்டும் மனிதர்கள் இருந்தாலும் கலை எல்லோருக்குள்ளும் ஒரு உலகை உற்பத்தி செய்திருக்கிறது. அவரவர் கலை. அவரவர் உலகம். ஒன்றாகக்கூடும் போது உலக மேடையில் நாமெல்லாம் நடிகர்களாக, நமக்கு நடித்து கதைசொல்ல மேடையேறும் நடிகருள்ளும் நாம் புகுந்துகொள்கிறோம். இந்தக் கூடுவிட்டுக் கூடுபாயும் சாத்தியமானது கூத்திலிருந்து மேடைநாடகம் சுவீகரித்துக்கொண்டது. மேடையை ந.முத்துசாமி சுவீகரித்துக்கொண்டார். பலவருடங்கள். பலமுயற்சிகள். அவரால் பலர், நவீன நாடகப் புள்ளியிலிருந்து கிளம்பி பலதரப்பட்ட நாடகங்களை முயற்சித்து வெற்றிபெற்றும் தோல்வியுற்றும் வெற்றி பெற்றவர்கள் தோல்யடையும்வரை நாடகத்தை மேடையேற்றுவதைத் தொடர்ந்தும், தோல்வியடைந்தவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து தோல்வியடைந்தபடியே...., என நாடகம் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து நிகழ்வதற்கு அதன் மீதான ஆர்வம் அனைத்துக் கலைஞர்களுக்குள்ளும் தீயாய்க் கனன்றுக்கொண்டிருக்கக் காரணமாக விளங்கும் பெருந்தீ ந.முத்துசாமி.

பட்டமும் பதவியும் அவரது இலக்காக இல்லாததே இதுவரையிலான நாடக முயற்சிகளுக்கும் வெற்றிக்கும் காரணம்.

அந்த ஒரு விளக்கிலிருந்து பல விளக்குகள் ஒளி பெற, நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியது நிறைய.

திரு.ந.முத்துசாமி அவர்கள் பெற்ற பத்மஸ்ரீ விருதினால் பெருமைகொள்ளும் அத்தனைபேருடன் நானும்.

அரியநாச்சி